திருச்சி காவிரி பாலம் இன்று நள்ளிரவு முதல் முழுவதுமாக மூடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சீரமைப்பு பணி நடைபெற்றது. ஆனாலும் தற்பொழுது வரை பாலத்தில் சில பகுதிகளில் அவ்வப்போது பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தொழில்நுட்பக் கருதியினர் பாலத்தை ஆய்வு செய்தனர்.
இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தொடர்ந்து கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்வதால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரியர்கள் முழுமையாக சேதமடைந்தது ஆய்வில் தெரியவந்தது. உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் தமிழக அரசு 6 கோடி 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் பாலமானது மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இருப்பினும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் பாலம் முழுமையாக மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடரும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.