கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகில் உள்ளது மண்மலை. இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவரது மகன் மணிமாறன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலம், மண்மலையில் இருந்து எடுத்தவாய்நத்தம் செல்லும் சாலை அருகில் உள்ளது. அந்த நிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடந்தது.
அந்த நிலத்தில் திடீரென்று யாரோ ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டு, அதன் மேற்பரப்பில் மேடை போன்று அமைக்கப்பட்டு, அதன் மேல் மஞ்சள், குங்குமம் ஆகியவை தெளிக்கப்பட்டு இருந்தது. இப்படி மர்மமான முறையில் இறந்தவர் உடல் புதைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நேற்று காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதுகுறித்து காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலறிந்த கச்சிராபாளையம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். அதில், அதே கிராம காலனி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான காளை மாடு ஒன்று இறந்து போனதாகவும் அந்த இறந்துபோன காளை மாட்டின் உடலை மணிமாறனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டதும் தெரியவந்தது.
நிலத்தின் உரிமையாளர் மணிமாறன், இறந்த மாட்டை தனது விவசாய நிலத்தில் எப்படி புதைக்கலாம் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கச்சிராபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்துபோன மாட்டைப் புதைத்தது தெரியாமல் அப்பகுதி மக்கள் மத்தியில் பயமும் பீதியும் ஏற்பட்டு, தற்போதுதான் நிம்மதி அடைந்துள்ளனர்.