Skip to main content

எழுத்தாளர் பாமாவிற்கு விருது வழங்கி சிறப்பிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Writer Bama was honored with an award

பெண்களுக்காகக் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஆம் தேதி) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாகத் தலித் மக்களின் குரலாக ஒலித்து சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 7 ஆம் தேதி (07.03.2024) அறிவித்திருந்தது. 

Writer Bama was honored with an award

எழுத்தாளர் பாமா, பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையைத் தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய ‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட் புக்' விருதைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எழுத்தாளர் பாமாவின் இலக்கியப் பணியினை பாராட்டி ஒளவையார் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (11.06.2024) வழங்கி சிறப்பித்தார். முன்னதாக எழுத்தாளர் பாமாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார். மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்து நடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” எனத் தெரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Cm MK Stalin announcement for Library in the name of the kalaiganr in Trichy 

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், “தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானம் நிறைவேற்றம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Implementation of the decision to conduct a caste-wise census

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அச்சமயத்தில் சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.

எனவே 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்களான வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.