முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் இயக்கம் சீராக உள்ளதாக துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் இருந்துவருகிறார். பிரதிநிதிகளாக முல்லைப் பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இரவின். உதவி செயற்பொறியாளர் குமார். கேரளா பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜோஸ்சக்ரியா. உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்தக் குழு கடந்த டிசம்பர் 9ல் அணையின் நீர்மட்டம் 120.85 அடியாக இருந்த போது இந்தத் துணைக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். வரும் 28ஆம் தேதி கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளதை முன்னிட்டு தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக குறைந்துள்ள நிலையில் அணைப்பகுதியில் செய்யப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்தும் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து நீர் வெளியேற்றம் சிப்பேர்ஸ் வாட்டர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.அதற்கு முன்பாக இக்குழு தலைவர் சரவணகுமார் தமிழக அதிகாரிகளுடன் தேக்கடி படகு துறையில் இருந்து தமிழக பொதுப் பணித்துறை படகில் புறப்பட்டு சென்றனர். கேரள அதிகாரிகள் கேரளா மாநில வனத்துறையின் படகில் அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அதிகாரிகள், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக குறைந்துள்ள நிலையில் அணைப்பகுதியில் செய்யப்படவேண்டிய மராமத்துப் பணிகள் குறித்து வரும் 28ஆம் தேதி கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்ய வருவதற்கு முன்னோட்டமாக தற்போது முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யப்பட்டது.
அணையின் சீப்பேஜ் வாட்டர் நிமிடத்திற்கு நாற்பத்தி ஒரு லிட்டர் அளவில் உள்ளது. இது அணையின் நீர்மட்டஅளவிலான 119.40க்கு மிகத்துல்லியமான அளவாக உள்ளது. அணையில் மூன்று மதங்களை இயக்கி பார்த்ததில் அதன் இயக்கம் சீராக உள்ளது துணைக் குழுவின் ஆலோசனை கூட்டம் முடிவு கண்காணி குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது" என தெரிவித்தனர்.