தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.
தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 925 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 836 காளைகள் அனுமதிக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் வர்ணனையாளர் பேசும் தொனி என்பது மிகவும் பிரபலமானது. சீறிப்பாயும் காளைகளை அடக்க முயலும் காளையர்களுக்கு மத்தியில் வர்ணனையாளர் வெளிப்படுத்தும் நகைச்சுவை உணர்வுகளும் வீரியமிக்க பேச்சுகளும் விளையாட்டை இன்னும் சுவாரசியமாக்கும் வகையில் இருக்கும். அதனால் வர்ணனைக்கு ஜல்லிக்கட்டில் முக்கிய இடம் உண்டு.
இந்நிலையில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சசிகலாவின் மாடு அவிழ்க்கப்பட்டிருந்தது. மாடு குறித்த அறிவிப்பை வர்ணனையாளர் பேசிய பொழுது ''மாட்டை புடிச்சுப் பார்... தொட்டுப் பார்... அமைச்சர் அண்ணன் மூர்த்தி வழங்கும் ஒரு சைக்கிள். அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா சின்னம்மா மாடு புடிச்சு பார்... தொட்டுப் பார்...'' என பேசினார். இரண்டாவது முறையும் அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மாடு என அறிவிப்பு செய்தார்.
அதிமுகவை மீட்கப் போவதாகவும், ஒருங்கிணைக்கப் போவதாகவும் ஏற்கனவே சசிகலா கூறிவரும் நிலையில், அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை என எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது வரை இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே மோதல்கள் இருந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டில் பொது அறிவிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் பரிவட்டம் வி.கே.சசிகலாவுக்கு கட்டப்பட்டது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.