புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில், ஊரைக் காக்க பெண் குழந்தைகள், பெண்கள் பங்கேற்று நடத்தும் வித்தியாசமான கொப்பித் திருவிழா காலங்காலமாக நடந்து வருகிறது.
செரியலூர் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை தனது பெரியப்பா வீட்டிற்கு காட்டுப் வழியாக சென்று காணாமல் போய் பல நாட்களுக்கு பிறகு கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்தில் இருந்து அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விழுந்ததாக கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாக கூடாது என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் (பருவமெய்தாத பெண் குழந்தைகள்) நோய் நொடியிலிருந்து ஊரை காக்க பொங்கல் நாளுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண்பொங்கல் வைத்து கன்று ஈனாத பசுமாட்டு சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும் 92 சிறிய சாணக் கொளுக்கட்டைகளும் பிடித்து அதில் கிருமிநாசினிகளான கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை மற்றும் கரும்பு, வெல்லம் வைத்து 3 படையலிட்டு இரண்டு படையல்களை இதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஓலை கூடையில் வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடிக்கு கொண்டு செல்கின்றனர்.
குழந்தைகள் கொண்டு வரும் படையல் கூடைகளை பாலை மரத்தடியில் வைத்து குழந்தைகள், பெண்கள் கும்மியடித்து வழிபட்டு ஊர்வலமாக தீர்த்தான் ஊரணிக்கரைக்குச் சென்று அங்கு ஓலைக்கூடையில் குழந்தைகள் கொண்டு வந்த பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழாவில் சிறிய பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக்கூடைகளை தூக்கிச் செல்கின்றனர். வழிபாடுகள் முடிந்த பிறகே விரதம் முடிக்கின்றனர்.
பல நூறு ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் தொடங்கிய இந்த கொப்பித் திருவிழா என்ற கலாச்சார நிகழ்ச்சி இன்றைக்கு மட்டுமல்ல இனியும் இந்த கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்கின்றார்கள் கிராம மக்கள். அதே போல், ‘இப்படி செய்வதால் எங்கள் கிராமத்தில் அம்மையால் யாரும் இறப்பதில்லை. அதனால் முன்னோர்களின் வழிகாட்டல்படி தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தின் நம்பிக்கை இது என்றவர்கள் எங்கள் ஊரைக் காக்க ஒரு நாள் விரதம் இருப்பதை பெறுமையாக நினைக்கிறோம்’ என்றனர் பெண் குழந்தைகள்.
‘கொப்பிக் கொட்டல்’ என்பதே குறிப்பிட்ட திருவிழா நடக்கும் இடத்தின் பெயராக உள்ளது. கொப்பிக் கொட்டல் என்பது ‘கும்மியடித்தல்’ என்பது பொருள். கிராமங்களில் தை திருநாளை வரவேற்க கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்கும் நிகழ்வாகத் தான் பெண் குழந்தைகளுக்கு கும்மியடிப்பதை கற்றுக் கொடுக்கும் நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. இதே நாளில் மற்றொரு பக்கம் இளைஞர்கள் போர்காய் தேங்காய் போட்டிகளை நடத்தி பலரையும் மகிழ்வித்து வருகின்றனர். செரியலூர் கிராம விளையாட்டு திடலில் போர்க்காய் தேங்காய் விளையாட்டில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தேங்காய்களை நேருக்கு நேர் மோதவைத்து பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் மோதி உடைக்கும் நிகழ்வுகளும் நடக்கும். சுமார் 500 க்கும் மேற்பட்ட தேங்காய்களுடன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் செல்வார்கள்.