புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னமுதலியார்சாவடி, பழைய ஆரோவில் ரோடு என்ற முகவரியில் வசித்துவரும் பிதிஷா (BIDISHA SAMANTARAT (INDIAN) WIFE OF SEGHI LEONARDO (ITALIAN) என்ற பெண்மணியின் வீட்டினுள் ஆங்கிலப் புத்தாண்டின் போது அத்துமீறி உள்ளே நுழைந்து அவரை தாக்க முயன்ற ருவாண்டா நாட்டை சேர்ந்த பீஸ் ஜான் (AMANI PASCAL PEACE JOHN) என்ற நபரை கோட்டகுப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் கொண்ட போலீஸ் குழுவினர் கைது செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் மேற்படி ருவாண்டா நாட்டை சேர்ந்த அமானி பாஸ்கல் பீஸ் ஜான் என்பவர் எந்தவிதமான விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்துக் கொள்ளாமல் 2014-ஆம் ஆண்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பீஸ் ஜான் வானூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) நளினிதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டில் இருந்து இதுவரை மூன்று நபர்கள் மீது இவ்வாறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜெர்மனி நாட்டில் இருந்து விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்த நபர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்தும், சிறையில் அடைத்தும் அவர் மீண்டும் ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதுபோன்று விசா காலம் முடிந்து கோட்டகுப்பம் மற்றும் ஆரோவில் காவல் நிலைய எல்லையில் தங்கியிருக்கக் கூடிய வெளிநாட்டு நபர்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவர்களை மீண்டும் அவரது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.