Skip to main content

ஈரோடு பேருந்து நிலையத்தில் கடைகளைக் காலி செய்ய மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: 34 பேர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

high court erode bus stand

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து விட்டு, புதிதாகக் கட்டும் வகையில் கடைகளைக் காலி செய்யும்படி, உரிமம் பெற்றவர்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்துவிட்டு, புதிதாக வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையத்தைக் கட்ட ஈரோடு மாநகராட்சி திட்டமிட்டது. அதனடிப்படையில், தற்போது கடைகளின் உரிமம் பெற்றவர்களை, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் காலி செய்யும்படி, செப்டம்பர் 17ஆம் தேதி, மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை எதிர்த்து, கடை உரிமம் பெற்றுள்ள தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 34 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, 2025ஆம் ஆண்டு வரை கடைகளுக்கு உரிமம் பெற்றுள்ள நிலையில், காலி செய்யச் சொல்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தங்கள் கருத்துகளைக் கேட்காமல், கடைகளைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும், மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், கட்டிடம் இடியும் நிலையில் இருந்ததாலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அதை இடித்துவிட்டு புதிதாகக் கட்ட முடிவு எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸில் விதிமீறல் ஏதும் இல்லை’ எனக் கூறி, வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ‘நீண்ட நாட்கள் வர்த்தகம் செய்துவருவதால் அந்த இடத்திற்கு உரிமைகோர முடியாது. கடைகளைக் காலி செய்வதற்கான அவகாசம், மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 நகரங்களில் ஈரோடும் ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும், நாட்டின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது’  என்று நீதிபதி, தனது  உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்