
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கம் பகுதியில் விவசாயி ஒருவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், செ.நாச்சிப்பட்டு, மன்மலை உள்ளிட்ட பகுதிகளில் 8 வழிச்சாலைக்காக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலஅளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் விளை நிலங்களில் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், செ.நாச்சிப்பட்டு பகுதியில் இன்று நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுக்க முற்பட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உணர்ச்சிவசப்பட்ட ஒரு விவசாயி வேகமாக கிணற்றில் குதித்தார்.
மேலும், கிணற்றில் குதித்து உயிரை மாய்த்தாலும் மாய்ப்போமே தவிர நிலத்தை கொடுக்கமாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கிணற்றில் குதித்த விவசாயியை காப்பாற்ற போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.