கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 கிராம ஊராட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் 64 தலைவர்களை மக்கள் தேர்வு செய்தனர். இதன்பிறகு கடந்த காலங்களில் ஒவ்வொரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததும் அந்த அந்தந்த ஒன்றிய அளவில் உள்ள ஊராட்சி தலைவர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு என ஏற்படுத்துவது உண்டு.
இந்த கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் ஏற்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள் ஒன்றுகூடி முறையாக தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள். இப்படி தேர்வு செய்த பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து தங்களின் ஊராட்சிகளுக்கு தேவையான திட்டங்களை செய்து தருமாறு ஒற்றுமையுடன் வலியுறுத்துவார்கள்.
இதன்படி தமிழகத்தில் பல ஒன்றியங்களில் ஊராட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி கூட்டமைப்பு பொறுப்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். அதேபோன்று சமீபத்தில் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி கூட்டமைப்பின் தலைவராக கொத்தனூர், செல்வக்குமாரி, இரகுநாதன் செயலாளராக கோவிலூர் வீரமுத்து மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து ஒன்றிய ஆணையர்கள் இடம் கடிதம் கொடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இலங்கியனுர் ஊராட்சித் தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் வேப்பூரில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 40 தலைவர்கள் கலந்து கொண்டனர். சௌந்தரராஜன் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கியுள்ளனர். இப்படி இரு தரப்பும் தாங்கள் தான் கூட்டமைப்பு தலைவர் எனக் கூறுகின்றனர். முதல் தரப்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில் 50 தலைவர்கள் கலந்து கொண்டதாக அறிவித்தனர். இப்போது சவுந்தரராஜன் தலைமையில் 40 பேர் கலந்துகொண்டதாக அறிவித்துள்ளனர். ஆனால் ஒன்றியத்தில் மொத்தமே 64 ஊராட்சி தலைவர்கள் தான் உள்ளனர். இதில் எந்த கூட்டமைப்பு முறையாக தேர்வு செய்யப்பட்டது என்ற குழப்பம் அதிகாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
எனவே இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து முறையாக கூட்டமைப்பு பொறுப்பாளர்களை தேர்வு செய்து, அதிகாரிகளை சந்தித்த இவர்கள் கோரிக்கைகளை பிரச்சினைகளை அதிகாரிகள் முன்வைத்தால் அவர்கள் தீர்த்து வைப்பார்கள். அனைத்து தலைவர்களும் ஒற்றுமையோடு இருந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு சரியாக இருக்கும் என்ன செய்யப்போகிறார்கள் ஊராட்சித் தலைவர்கள்.