டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டட ஜெ. அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
![stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZWDhZ6bEBFjFyQVYrHd2yupB7ulBgFvDPNf-JEdzq_o/1533347648/sites/default/files/inline-images/drgd.jpg)
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி: எந்தக் குறையும் என்னிடம் இல்லை, என் வேலையை நான் வீரியத்துடன் செய்துவருகிறேன் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்மீது இருக்கும் பொறாமையில் திட்டமிட்டு காழ்ப்புணர்வுடன் இந்த புகார் வந்துள்ளது என சம்பந்தப்பட்ட அமைச்சர் புலம்பியிருக்கிறாரே?.
பதில்: நாங்கள் அவருடைய வேலையை குறைசொல்லவில்லை அவர் கொள்ளை அடித்திருக்கிறாரா இல்லையா அதுதான் எங்களின் கேள்வி.
நீதிமன்றத்தில் இந்த புகாரை அளித்தது தெருவில் போகும் யாரோ அல்ல, நீதிமன்றத்தில் வருமானவரித்துறைதான் இந்த புகாரை பதிவுசெய்துள்ளது. அவர் உண்மையிலேயே நேர்மையாக நியாயமாக இருக்கிறார் தன் மடியில் கனம் இல்லை என்றால் எப்படி மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராஜா மீது ஊழல் குற்றசாட்டு வந்தபோது கலைஞர் சொன்னவுடன் அவர் பதவி விலகினாரோ, தயாநிதிமாறன் எப்படி குற்றச்சாட்டுகளுக்கு பதவி விலகினாரோ அதுமாதிரி தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், திராணி இருந்தால் பதவிவிலகி தன்மீது குற்றம் இல்லை என்று வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிக்கவேண்டும். இப்படி பதவிவிலகாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பது எனது கருத்து.
பகிரங்கமாக சொல்லப்போனால் அரசே இதற்கு உடந்தைதான். டிஜிபி மாமூல் வாங்கியும் அவர் பதவிநீக்கம் செய்யப்படாமல் இருக்கிறார் என்றால் அரசிற்கும் இதில் பங்குண்டு. டிஜிபி ராஜேந்திரன் அவர்களும் ப்ரோமோஷன் எக்ஸ்டென்ஷன் கொடுத்தது எடப்பாடி தானே. என்னைப்பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கே மாமூல் போகிறது என்பதுதான் என்னுடைய வாதம்.
சிபிஐ விசாரணை வரும்பொழுது எந்ததெந்த மந்திரிகள், அதிகாரிகள் இதில் லஞ்சம் வாங்கியுள்ளார்கள் என தெரியப்போகிறது. கண்டிப்பாக இதற்கு தீர்வு கிடைத்தே ஆகவேண்டும் ஆகவே இவர்கள் பொறுப்புகளில் இருந்துகொண்டு கண்டிப்பாக தப்பிப்பார்கள் எனவேதான் சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலக வேண்டுமென அறிவுறுத்தும் வகையிலே திமுக மேற்குமாவட்டம் சார்பாக ஜெ.அன்பழகன் தலைமையில் டிஜிபி அலுலகலத்தின் முன் போராட்டம் நடத்திய திமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் புதுக்கோட்டையிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் போராட்டம் நடத்திய திமுகவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் லோக்ஆயுத்தா சட்டம் கொண்டுவரப்பட்டு ஊழல் செய்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என எல்லோரும் தண்டிக்கப்படுவர், இவர்கள் செய்யும் எல்லா ஊழலுக்கும் எங்களிடம் ஆதாரம் உள்ளது. இவர்கள் லோக் ஆயுத்தா மசோதாவை கொண்டுவரமாட்டார்கள். காரணம் இவர்களே கிணறுத்தோண்டி அவர்களே விழுவது மாதிரியானது எனவே இவர்கள் லோக்ஆயுத்தாவை அமைக்கமாட்டார்கள்.