தமிழ்நாட்டில் நகராட்சிகள், பேரூராட்சி, ஒன்றியங்களில் சேர்மன் – வைஸ் சேர்மன் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஒத்துப்போகவில்லை. இதுபற்றி அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏக்களிடம் முறையிட்டால் அவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாக பேசி அனுப்புகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல நகராட்சிகளிலும், பேரூராட்சி, ஒன்றியங்களில் புகையத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து ஒவ்வொரு இடத்திலும் வெடித்து வருகிறது. தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக அதிரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக முன்னாள் ஒ.செ மாணிக்கத்தின் அண்ணன் மகள் அனிதா குப்புசாமி சேர்மனாக்கப்பட்டார். அனிதாவின் கணவர் குப்புசாமி தான் மனைவிக்கு பதில் நிர்வாகம் செய்து வருகிறார். எங்கள் கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை, சாலை வசதி சரியாக இல்லை, கழிவுநீர் கால்வாய் கட்ட, பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்குங்கள் என மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தால் அப்படி கேள்வி கேட்கும் கவுன்சிலர்களை ஒதுக்குகின்றனர். கேள்வி கேட்டால் ஏன் கேள்வி கேட்குற என வசைபாடத் துவங்கியுள்ளனர்.
அதோடு இந்த ஒன்றியத்தின் வைஸ்-சேர்மனாக இருப்பவர் முனியம்மாள் கணேசன். முனியம்மாள் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அப்போது தீவிர கட்சிக்காரரான கணேசனை சமாதானப்படுத்தி வைஸ்-சேர்மன் பதவி தரப்பட்டுள்ளது. பெரும்பாலான கவுன்சிலர்கள் முனியம்மாள் பக்கம் இருக்கின்றனர். இதனால் சேர்மன் தரப்பு வைஸ்-சேர்மன் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்களுக்கு நெருக்கடி தந்து வந்துள்ளனர். இதுபற்றி மா.செவும் அமைச்சருமான காந்தியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் 6 மாதத்துக்கு முன்பு வைஸ்-சேர்மன் முனியம்மாள் கணேசன் தலைமையில் 7 கவுன்சிலர்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அப்போதும் சேர்மனின் போக்கு மாறவில்லையாம்.
சேர்மனை எதிர்க்கும் கவுன்சிலர்கள் ஒன்றிய நிதி வாங்கி ஒப்பந்த பணிகள் செய்துவிட்டு அதற்கான பில்லை கேட்டால், அந்த பில்லை தராமல் பிடிஓ மூலமாக நிறுத்தி வைத்துள்ளாராம் சேர்மன் கணவர் குப்புசாமி. இதனால் அதிருப்தியான திமுகவை சேர்ந்த வைஸ்-சேர்மன் முனியம்மாள் கணேசன், கவுன்சிலர்கள் திமுக ராணி சேட்டு, அதிமுக யுவராஜ், காங்கிரஸ் மாரிமுத்து, பாமக தீபா, சுயேட்சை கோமதி குமார் ஆகியோர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடந்த மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர், பி.டி.ஓ முஹம்மத் சைபுத்தின் நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறியுள்ளார். கூட்டம் முடிந்ததும் குற்றம் சாட்டியவர்களை பி.டி.ஓ சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக ஒவ்வொருவரும் தனித்தனியாக கடிதம் தந்துள்ளனர். அது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 6 பேர் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் மீதி இருப்பது சேர்மன் மற்றும் 3 கவுன்சிலர்கள் மட்டுமே. பலமில்லாததால் ஒன்றிய நிர்வாகம் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் ராஜினாமா கடிதத்தின் மீது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார். திமுக மாவட்டத் தலைமை என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.