அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, 130 கோடி இந்தியர்களின் சார்பாக சபையில் பேசுவதாக தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஐநா சபை கூட்டத்தில் பேசுவது பெருமைக்குரிய ஒரு விஷயம். மிகப்பெரிய சுகாதார திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதேபோல புவி வெப்பமயமாதலால் இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ இந்தியா விரும்புகிறது.
இதற்கான ஒரு திட்டமாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள சில நாடுகள், இந்தியாவை காயப்படுத்தி வருகின்றன. தீவிரவாதத்தை வேரறுக்க, அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும்" என பேசினார். இந்த உரையின் போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில் மதுரை ஆரப்பாளையத்தில் புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கிவைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “இதுவரை எந்த இந்திய பிரதமரும் தமிழை மேற்கோள் காட்டி பேசியதில்லை. தமிழ் மொழியின் வரலாற்றை அறிந்தவர் மோடி என்பதால்தான் அடிக்கடி தமிழில் பேசுகிறார். ஐநா சபையில் புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி நரேந்திரமோடி பேசியுள்ளதால் தமிழுக்கு பெருமை. தமிழக மக்கள் அதற்காக பிரதமரை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சுபஸ்ரீ பேனர் விவகாரத்தின் முக்கிய காரணமாக இருப்பவர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், “அதிமுக ஆட்சியில் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.