ஓசூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சேலத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சத்தியமூர்த்தி (35). இவரை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டு, நிலம் வாங்குவது தொடர்பாக பேசினர். அவரிடம் தாங்கள் வாங்கப்போகும் நிலத்திற்கு முன்பணம் தர வேண்டும் என்றும், அதை சேலத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறி, சத்தியமூர்த்தியை சேலத்திற்கு வரவழைத்தனர்.
சேலத்திற்கு வந்த அவரை, எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒரு காரில் அதிரடியாகக் கடத்திச்சென்று, சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் அடைத்து வைத்தது. மர்ம நபர்கள் அவரிடம் 11 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று மிரட்டியது. உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த சத்தியமூர்த்தி தனது வங்கிக் கணக்கில் இருந்து கடத்தல் கும்பல் கேட்ட தொகையை எடுத்துக் கொடுத்தார். அதன்பிறகே கடந்த 15ம் தேதி மர்ம நபர்கள், சத்தியமூர்த்தியை விடுவித்தனர்.

இந்நிலையில் ஓசூருக்கு போய்ச்சேர்ந்த அவர், உறவினர்களுடன் வந்து சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் தான் கடத்தப்பட்டது குறித்தும், அந்த கும்பல் மிரட்டிப் பணம் பறித்தது குறித்தும் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அன்னதானப்பட்டி மற்றும் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஜீவா (36), சுஜித்குமார் (20), ஷாஜித், கோபால் (28), கவுரிசங்கர் (33) ஆகிய நான்கு பேரை, செவ்வாய்க்கிழமை (ஜன. 21) கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, சத்தியமூர்த்தியிடம் மிரட்டி வாங்கிய தொகையில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்ட அதே நாளில், மற்றொரு இடத்தில் பதுங்கி இருந்த அவர்களின் கூட்டாளிகளான சேலத்தைச் சேர்ந்த டாக் பாபு என்கிற பாபு (30), முருகபாண்டியன் (25), கார்த்திக் (26), பிரகாஷ் (25) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, சத்தியமூர்த்தியிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்ட தொகையில் 9.60 லட்சம் ரூபாய், 2 பவுன் தங்கக்காசு, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் இவர்களையும் சேர்த்து மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.