அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த 2023 ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கையால் அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை இழந்து இருந்தது. மேலும் இது பெரும் சர்ச்சையாகவும் மாறி இருந்தது. அதானி குழுமம், இந்திய முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையே, அதானியின் முறைகேடுகளுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமும் (செபி) உதவியதாக அதன் தலைவர் மாதவி புச் மீதும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதனால், மத்திய பா.ஜ.க அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கும் சூழல் ஏற்பட்டது. தற்போது வரை அதானி நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
இந்த சூழலில் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியானது. அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் அறிவிப்பு வெளியிட்டார். அதானி நிறுவனம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீரென மூடப்படுவதாக வெளியாக அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டதால், மோடி அதானிக்கு க்ளீன் சிட் வழங்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் இல்லை. ஜனவரி 2023 இல் வெளிவந்த ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க இந்திய உச்ச நீதிமன்றம் நிர்பந்திக்கப்பட்டது. 2023 ஜனவரி முதல் மார்ச் வரை பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கேட்ட 100 கேள்விகளில், 21 கேள்விகள் மட்டுமே ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியில் வெளிப்படுத்தப்பட்டவை. இந்த விஷயம் இன்னும் தீவிரமானது. தேச நலனைப் பணயம் வைத்து பிரதமரின் நெருங்கிய நண்பர்களை வளப்படுத்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தவறாகப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.