காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
திமுக வேட்பாளர் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்கும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இன்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமியும் இன்று கடைசி நாள் என்பதால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காட்டுகின்ற ஒரு வெற்றிப் பாதையாக, வெற்றிக்கு உண்டான அறிகுறியாக, வெற்றிக்குரிய வெளிச்சமாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தோர்தல் இருக்கும் என்று நம்புகிறோம்.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், இதுவரையில் பெற்றுவிடாத வாக்குகள் வித்தியாசத்தில், யாரும் எதிர்பாராத வாக்கு வித்தியாசத்தில் முதல்வரின் சீரிய திட்டங்களால் ஈரோடு கிழக்கு மக்கள் வெற்றியை திமுகவிற்கு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக வேட்பாளரை ஆதரித்து வருகிறார்கள். கூட்டணியை மதிக்கின்ற ஒரு தலைவர் தமிழக முதல்வர். அவரைப்போல் கூட்டணி கட்சியினரை மதிக்கின்ற தலைமை எங்கும் காண முடியாது. அவரை சந்திப்பதற்கும் குறைகளை நிறைகளை எடுத்துக் கூறுவதற்கும் சுட்டிக்காட்டுவதற்கும் முதலமைச்சர் கேட்கின்ற போதெல்லாம் கூட்டணியினருக்கு வாய்ப்பை தருகிறார். ஒரு சில நேரத்தில் அவர்கள் குற்றங்களைச் சொன்னால் கூட அவைகளையும் நிவர்த்தி செய்து அதன் பிறகு அவர்களையும் அழைத்து குற்றத்தினுடைய பின்னணியையும் குற்றத்தினுடைய விளக்கத்தையும் முதலமைச்சர் கொடுக்கிறார். இதனால் கூட்டணி அசைக்க முடியாத அளவிற்கு கைகோர்த்துக்கொண்டு பயணிக்கிறது'' என்றார்.