மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ‘சவதீகா...(Sawadeeka)’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு பின்பு விலகியது. அதற்கு காரணமாக காப்புரிமை இருப்பதாக கூறப்பட்டது. இப்படம் 1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக்டவுன்’ படத்தின் தழுவலாக இருப்பதாக பேசப்பட்ட நிலையில் பிரேக்டவுன் படக்குழுவினர் லைகா நிறுவனத்திடம் தங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் கேட்டுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. அது தொடர்பான பேச்சு வார்த்தை பல நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது சுமுகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் அஜித் - த்ரிஷா இருவரும் காதலிக்க பின்பு சில காரணங்களால் பிரிகின்றனர். ஒரு கட்டத்தில் த்ரிஷா தொலைந்து போக அவரை கண்டுபிடிக்க போராடும் அஜித், பெரிய கும்பலை எதிர்கொள்கிறார். அவர்களுடன் சண்டையிட வரவில்லை என்றும் ஒரு காட்சியில் சொல்கிறார். இறுதியில் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை அக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் இப்படத்தை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.