டிக்டாக் செயலிகளில் இளைஞர்கள் நினைப்பதை எல்லாம் பதிவிட்டு சிக்கிக் கொள்கிறார்கள். பிறந்த நாள் கேக் அரிவாள்களில் வெட்டுவது போன்ற காட்சிகள் டிக் டாக் போன்ற செயலிகள் மூலம் சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து கைது நடடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதேபோல ஊரடங்கு நேரத்தில் பல நல்ல வீடியோக்களை இளைஞர்கள் வெளியிட்டாலும் சில தகாத வீடியோக்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் சிறுவர்கள் முயல் வேட்டையாடி அதை டிக்டாக்கில் வெளியிட்டு வனத்துறையிடம் சிக்கி ரூ 90 ஆயிரம் வரை அபராதம் செலுத்தினர்கள். இந்தநிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சி காத்தான்விடுதி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20), பிரபு(25), சூரி(27) ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள காடுகளில் சில உடும்புகளைப் பிடித்து, அவற்றை கைகளில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து இது குறித்த புகாரின்பேரில் மூவரையும் புதுக்கோட்டை வனத்துறையினர் கைது செய்தனர்.
இப்படி விளையாட்டாக செய்யும் வீடியோ பதிவுகள் அவர்களுக்கே ஆபத்தில் முடிகிறது.