அதிரி புதிரி முடிவுகளுக்கு சொந்தக்காரரான எலான் மாஸ்க் அவ்வப்போது திடீர் திடீரென அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் திடீரென ட்விட்டரை விலைக்கு வாங்கிய எலான் மாஸ்க் அதற்கு எக்ஸ்(x) என பெயரிட்டு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் எலான் மஸ்க் திடீரென எக்ஸ் தளத்தை மேம்படுத்தத் திட்டம் இருப்பதாகவும் அதற்கு ஊழியர்கள் தேவை என செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'திறமைசாலிகளாக இருந்தால் போதும் நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள், எங்கு பட்டம் பெற்றீர்கள், எந்த நிறுவனத்தில் இதற்கு முன்பு வேலை செய்தீர்கள் என்பதெல்லாம் அவசியமில்லை. திறமை இருந்தால் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம். பேமெண்ட்ஸ் மேனேஜிங், இ-காமர்ஸ், மல்டிமீடியா சேவைகளை உட்படுத்தி எக்ஸ் தளத்தை மேலும் மேம்படுத்த திட்டமிட்டு இருக்கிறேன். இந்த ஆண்டு எக்ஸ் வலைத்தளத்தில் பேமெண்ட் மற்றும் மல்டிமீடியா சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். எனவே code@x.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களது விவரங்களை அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.