உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம், பாரு பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் சவுகான். இவர், தனது பக்கத்து வீட்டு பெண்ணான கியான் லட்சுமி என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
தனது காதலை எடுத்துச் சொல்லி தன்னை திருமணம் செய்யுமாறு அந்த பெண்ணிடம் ஷியான் கூறியுள்ளார். ஆனால், அவருடன் திருமணம் செய்ய கியான் லட்சுமி மறுத்து, அவரை தனது சகோதரனாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதனால் ஷியாம், அந்த பெண் மீது கோபத்தில் இருந்துள்ளார். ரக்ஷா பந்தன் விழாவின் போது ஷியாமின் கையில் ராக்கி கட்டுவதை லட்சுமி வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், லட்சுமி வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது. இந்த செய்தியைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த ஷியாம், நேற்று (10-01-25) கோடாரியை எடுத்துக் கொண்டு லட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த லட்சுமியை கோடாரியைக் கொண்டு தாக்க முயன்றார். ஆனால், அந்த பெண் தப்பித்து ஒரு அறையில் தன்னைப் பூட்டிக் கொண்டாள். இதையடுத்து, அந்த பெண்ணின் இரண்டு சகோதரிகளும், தாயும் அவரைத் தடுக்க முயன்ற போது, அவர் அவர்களையும் தாக்கினார்.
இதில் அவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஷியாம் சரண் சவுகானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.