காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
திமுக வேட்பாளர் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்கும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இன்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமியும் இன்று கடைசி நாள் என்பதால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே திமுகவை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆளும் அரசுகள் ஜனநாயகம் மரபுகளை பின்பற்றாமல் அதிகார பலத்துடன் இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிராக அரசியல் அவலங்களை அரங்கேற்றி இடைத்தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது. இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவளிக்கவில்லை. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது' என தெரிவித்துள்ளார்.