கவிஞர் கண்ணதாசனின் 92-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, மாபா பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக ஆளுநர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது தமிழக அரசின் பணிகள், திட்டங்களை வலுப்படுத்துவது மாதிரிதான் உள்ளது. எந்த இடத்திலும் நாங்கள் தவறு செய்ததாக ஆளுநர் சொல்லவில்லை. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிகாரிகள் அளவில் அவர் ஆய்வு செய்வது எங்களை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தி.மு.க.வினர் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் தேவையில்லாதது. சட்டரீதியாகவும் சரி கிடையாது. தார்மீக ரீதியாகவும் சரி கிடையாது. ஆளுநர் ராஜ்பவனில் இருந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு.
அரசியல் சாசன சட்டப்படி அவருக்கு உள்ள கடமையை அவர் செய்கிறார். தூய்மை இந்தியா திட்டம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல ஆளூநர் செயல்படுகிறார்.
முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டியை மாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு காரணம் வேறு. அந்த உதாரணம் இந்த ஆளுநருக்கு பொருந்தாது.
சென்னாரெட்டி அரசின் திட்டங்களை எதிர்த்தார். இதனால் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போதைய ஆளுநர் நெகட்டிவ் ஆக எதுவும் சொல்லவில்லை. எங்களை ஊக்கப்படுத்தி தான் வருகிறார்’’ என்று தெரிவித்தார்.