அதிமுகவை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில், இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதல் ஊர் அறிந்த விஷயம். ஒற்றை தலைமை தான் வேண்டும் என ராஜன் செல்லப்பா பிள்ளையார் சுழி போட, குன்னம் ராமசந்திரன் அதற்கு பக்கவாத்தியமும் வாசித்தார். இரண்டாம் கட்ட தலைவர்கள், இதுகுறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றும் குறிப்பிட்டனர்.

கட்சிக்கு எதிராக யாரும் எதுவும் பேச வேண்டாம் என்று அறிக்கை மூலம் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், கே.ஏ.செங்கோட்டையனை பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்று சிவகங்கையில் போஸ்டர் ஒட்டி கட்சித் தலைமைக்கே ஷாக் கொடுத்தனர் தொண்டர்கள். இதேபோல், கொளத்தூரை சேர்ந்த ஆறுமுகம் இபிஎஸ் தான் கட்சித் தலைமை ஏற்க வேண்டும் என்றும் போஸ்டர் ஒட்டி விசுவாசத்தை காட்டி இருக்கிறார். உங்களுக்கு நாங்கள் குறைந்தவர்களா? என சவால் விடுக்கும் வகையில் ஓபிஎஸ்சின் ஆதரவாளரும் நடிகருமான வெள்ளை பாண்டியன், தர்மயுத்தம் புகழ் ஓபிஎஸ்-ஐ கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்க வரச்சொல்லி போஸ்டர் ஒட்டி உள்ளார். இப்படி இவர்கள் 3 திசையில் குறுக்குசால் ஓட்டி வருகின்றனர்.


ஒற்றைத் தலைமை உண்டா? இல்லையா? என்பதை காலம் தான் முடிவு செய்யும் என்று நேற்று வரை சொல்லி வந்த அமைச்சர் ஜெயக்குமார், இன்று டோனை மாற்றி "அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியமில்லை" என்கிறார்.

இதனிடையே, "அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் தவிர மற்ற யாரும் தெரிவிக்கும் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல. அது அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல. எனவே, மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை வெளியிடவேண்டாம். இதுசம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைக்கு எங்களை ஆட்படுத்தமாட்டீர்கள்" என நம்புகிறோம் என்று ஊடகங்களுக்கு அதிமுக தலைமை அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறது.