சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். அதன்படி ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வித்யாகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.02.2025)விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் முன் நேரடியாக வந்த தடயவியல் நிபுணர்கள் தற்போது வரவில்லை. இது அவர்களின் பயத்தைக் காட்டுகிறது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர வேண்டுமா? என மாநில அரசிடம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவியுங்கள். அவர் அமைச்சராக இருப்பதால் சாட்சியங்கள் சொல்பவர்கள் பயப்படுகிறார்கள். 212 அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளனர். எனவே அவர் அமைச்சராகத் தொடர விரும்பினால் முன்னுரிமை கொடுத்து இந்த வழக்கை விசாரிக்கலாம்” என அமலாக்கத்துறை வழக்கறிஞர்களிடம் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.