![K. Balakrishnan Said Tamil Nadu government should take action](http://image.nakkheeran.in/cdn/farfuture/ndzCqEIcue10WzrSvSBzcpgfCmLvTdq8131uIhJLNHQ/1739352182/sites/default/files/inline-images/58_64.jpg)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு வரைவு அறிக்கை தொடர்பாக திண்டுக்கல்லில் மதுரை மாநகர், புறநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் பங்கேற்ற சிறப்புப் பேரவைக்கூட்டம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பஞ்சமி நிலத்தை தன் பெயருக்கு கிரயம் வாங்கி, முறைகேடாக பட்டாவாக மாற்றியிருக்கிறார் என்ற புகார் எஸ்.சி., எஸ்டி ஆணையத்திற்கு புகார் வந்து விசாரித்த பிறகு அந்த பட்டாவை ஆணையம் ரத்து செய்துள்ளது. இது என்ன நியாயம்? எப்படி அவர் பெயருக்கு பஞ்சமி நிலத்தை பட்டா போட்டுக் கொள்ளலாம்? அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சாதாரண பாடியலின மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை எல்லாம் பினாமியாக வாங்கிக்கொண்டு பட்டா மாறுதல் செய்து கொள்கிற போக்கு உள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. இது பற்றி ஓ.பி.எஸ். வாய் திறந்து பதில் சொல்லவில்லை. அப்படி என்றால் எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் விசாரணை செய்தது தவறானதா? இது போன்று பஞ்சமி நிலங்களை பட்டா மாறுதல் செய்ததை ஆய்வு செய்து அந்த நிலங்களை கைப்பற்றி பட்டியலின மக்களுக்கு வழங்க அரசு முன்வரவேண்டும்.
சமீபத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்ஹா பிரச்சனையையொட்டி இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்த முயன்றன. இது போன்ற மதவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும். வேடிக்கை பார்க்கக்கூடாது. தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்க நீண்டகாலமாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. அண்ணாமலை போன்றவர்கள் கோவில் கோவிலாகச் சென்று வருகிறார்கள். பேசாமல் பூசாரி வேலை செய்யலாம். அதை விட்டுவிட்டு மதத்தின் பேரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
பிரதமர் மோடி டெல்லி தேர்தலில் வீதி வீதியாகச் சென்று ஒட்டுக்கேட்டார். உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஒரு அந்நிய நாட்டின் மீது படை எடுப்பதைப் போல மோடி அரசாங்கம் படையெடுத்து தான் டெல்லியை கைப்பற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து ஆம் ஆத்மி அரசை முடக்குவது போல முதலமைச்சரையே கைது செய்து 7, 8 மாதம் சிறை வைத் திருந்தார்கள். டெல்லி அரசாங்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. மாநில அரசு என்று இருந்தாலும் கூட மத்திய அரசு தான் ஆட்டிப்படைக்கிறது. இவ்வளவு அதிகார பிரயோகத்தைச் செய் த பிறகும் கூட 2 விழுக்காடு தான் ஓட்டு வித்தியாசம். எனவே பாஜக பெரிய வெற்றி பெற்றதாகவோ, ஆம் ஆத்மி படு தோல்வி அடைந்துவிட்டதாகவோ சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. நத்தம் விஸ்வநாதன் என்றைக்காவது திமுக வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறாரா? அதனால் அவர் அப்படித்தான் பேசுவார். மேலும் அதிமுக கட்சி பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கிறது.
பாலியல் கொடுமைகள் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு விவாதம் தேவை. தமிழ்நாட்டில் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தினசரி நடக்கிறது. இதுவரை மாணவிகள் மீது 246 ஆசிரியர்கள் பாலியல் கொடுமைகள் செய்ததாக புகார்கள் வந்துள்ளன. ஆசிரியர்களே மாணவிகள் மீது இப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
தினம் தினம் அடுக்காக பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள், பாலியல் கொலைகள் நடக்கின்றன. ரயிலில் போகும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரோட்டில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது ஒரு சமூக பிரச்சனை. தமிழ்நாடு அரசு இது தொடர்பாக தண்டனைகளை அதிகரிக்க சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வேங்கை வயல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளி என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் கள்ளக்குறிச்சியில் கணியமூரில் உள்ள பள்ளியில் இருந்து விழுந்து இறந்து போன மாணவி வழக்கில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. இறந்து போன மாணவியின் தாய் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இன்று வரை அந்த தாய் நீதிமன்றத்திற்கு நடையா நடந்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று சட்டப் போராட்டம் நடத்துகிறார். இவர் தான் கலவரத்தை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டுகிறது சி.பி.சி.ஐ.டி. அப்படி என்ன கலவரத்தை தூண்டினார்?
ஏற்கனவே இந்த கலவரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்ட போது, அந்த மாணவி தரப்பு வழக்கறிஞர்கள் எங்களுக்கும் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். நீதிபதிகளும் அதை ஏற்றுக்கொண்டு ஆணையில் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் தான் சிறப்பு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் மாணவியின் தாயாரையே முதல் குற்றவாளியாக சேர்ப்பதன் மூலம், மாணவி தற்கொலை செய்யப்படவில்லை, கொலை என்று தொடுத்திருக்கும் வழக்கை நிர்மூலமாக்க வேண்டும். மாணவி கொலை செய்யப்பட்டார் என்பதை மூடி மறைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 910 பேர் மீது வழக்குப் பதிவு செய்து. 47 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே சி.பி.சி.ஐ.டி. போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
பேட்டியின் போது சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி, அர்ஜுனன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.