
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து '33' என்ற எண் கொண்ட பேருந்து பைத்தூரில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மலைப்பகுதியான தவளப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. செல்வராஜ் என்பவர் பேருந்தை இயக்கியுள்ளார். பேருந்தில் பள்ளி குழந்தைகள் உட்பட எட்டு பேர் இருந்துள்ளனர். தொடர்ந்து மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது பிரேக் பிடிக்காமல் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநர், பள்ளி குழந்தைகள் இருவர் என மொத்தம் ஏழு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் செல்வராஜ் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் சேலம் கோட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு நடத்தினர். முன்னதாக பிரேக் பிடிக்காமல் பேருந்து கவிழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் செல்வராஜ் தொலைப்பேசியில் பேசியபடியே பேருந்தை இயக்கியதால் விபத்து நேரிட்டது தெரியவந்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.