நடிகர் ரஜினிகாந்தின் 70- ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இன்று, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன், ரஜினிகாந்த் படத்துடன் வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டை அணிந்தவாறு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என 100- க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்த்து, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க, அங்கு குவிந்துள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வந்திருந்த ரசிகர் கூட்டத்தில் பெண் ரசிகர் ஒருவர், "சூப்பர் ஸ்டார், உங்க ரசிகர்கள் வந்திருக்கோம், வாங்க சார்!" எனக் கண்ணீர் மல்க கதறியது, சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
''சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன்ஸ் வந்திருக்கோம் வாங்க சார். சூப்பர் ஸ்டாருக்கு ஜெ., சூப்பர் ஸ்டாருக்கு ஜெ...!'' எனக் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி உரத்த குரலில் கத்திய அந்தப் பெண்மணி, ''சூப்பர் ஸ்டார் சார், வாங்க சார், உங்கள பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை சார், என்ன விடமாட்றாங்க'' எனக் கண்ணீருடன் கலங்கிய குரலில் கத்தினார். மேலும், ரஜினிகாந்தைக் காண, தான் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.