
நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். மேலும், தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் திவ்யா சத்யராஜ் இணைந்தார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் அது திமுக. அதற்கு உதாரணம் முதல்வரின் காலை உணவு திட்டம். நான் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளேன். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் திமுக தான். அதற்கு உதாரணம் புதுமை பெண்கள் திட்டம். எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் கட்சியும் திமுக என்பதால் திமுகவில் இணைந்துள்ளேன். அப்பா என்னுடைய தோழர் என்பதால் அவர் எப்பொழுதும் எனக்கு பக்க பலமாக இருப்பார். திமுக தலைவர் என்ன பொறுப்பு கொடுக்கிறாரோ அந்த பொறுப்பில் கடுமையாக உழைப்பேன்'' என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று திவ்யா சத்யராஜுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திவ்யா சத்யராஜுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணை செயலாளர் பதவி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.