
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் மீது தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. அவரை கைது செய்துவிட்டதாக பொய்யான தகவலை பரப்பி பதிவாளரை பொதுவெளியில் அசிங்கப்படுத்த முயற்சித்த கலைச்செல்வன் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு தெரிவிக்கையில், “முத்திரை கட்டணத்தை குறைவாக பதிவு செய்து ரூ 1.34 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்ட பதிவாளரான செந்தூர் பாண்டியன் வீட்டில் நேற்று (15.02.2025) சோதனை நடத்தப்பட்டது. இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய போது முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக செந்தூர் பாண்டியன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள செந்தூர் பாண்டியன் வீட்டில் நேற்று டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 7 பேர் சோதனை நடத்தினர்.
நடைமுறை தவறு ஏதும் இல்லாத ஆவணப்பதிவில் பொய்ப்புகாரை விசாரிக்க பதிவுத்துறை தலைவர் அனுமதி அளித்தது எப்படி?. என லஞ்ச ஒழிப்புத் துறையின் (DVAC) புகாரினை எதிர்த்து செந்தூர் பாண்டியனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் பணியாற்றிவரும் கலைச்செல்வன், திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்களை தொடர்புகொண்டு முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரியாத வெளிநபர்களை சோதனைக்கு அழைத்து சென்றதாகவும், பொய்யான தகவலை பரப்பிய கலைச்செல்வன் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையின் கலைச்செல்வன் செயல்பாடு தொடர்பாக அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூர் பாண்டியனுக்கு பணி பாதுகாப்பும், உயிர்பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என அறிக்கை வாயிலாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.