தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை ஒதுக்கியது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் அவரவர்கள் கேட்ட சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கீடு செய்தது ஆணையம். ஆனால், கமல் தனது மக்கள் நீதி மய்யத்திற்கு கேட்ட டார்ச் சின்னத்தை, புதுச்சேரிக்கு மட்டும் ஒதுக்கி விட்டு தமிழகத்தில் ஒதுக்க வில்லை. கமல் கேட்டிருந்த டார்ச் சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி விட்டது. இதனால், மக்கள் நீதி மய்யம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழலில், இது குறித்து ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ள கமல்ஹாசன், கோர்ட்டிலும் வழக்கு போட்டுள்ளார். இதனடிப்படையில், டார்ச் சின்னத்தை எப்படியும் கமல்ஹாசன் பெற்று விடுவார் என்கிற நம்பிக்கை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வந்திருக்கிறது. அதேசமயம், டார்ச் சின்னம் தங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடம் கமல் விபரம் கேட்டிருப்பதாக ம.நீ.ம. வட்டாரங்களில் எதிரொலிக்கச் செய்கிறது.
இது குறித்து தேர்தல் ஆணைய தரப்பில் நாம் விசாரித்த போது, “பதிவு செய்யப்பட்ட அதேசமயம் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கு விருப்பமான சின்னங்களை கேட்டு 6 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது, மூன்று சின்னங்களை குறிப்பிட வேண்டும். அதனை பரிசீலித்து விதிகளின் படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே சின்னத்தை இரு கட்சிகள் கேட்டிருந்தால் முதலில் விண்ணபித்த கட்சிக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கப்படும்.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்காக டார்ச் சின்னத்தைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார் கமல்ஹாசன். ஆனால், அவருக்கு முன்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேறு ஒரு கட்சி, டார்ச் சின்னத்தை கேட்டிருந்ததால் முதலில் வருபவருக்கே முதல் முன்னுரிமை என்கிற அடிப்படையில் அந்த கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கீட்டு செய்துள்ளனர். இதனால், தமிழகத்தில் டார்ச் சின்னம் கமலுக்கு கிடைக்கவில்லை. அதேசமயம், பாண்டிச்சேரியிலிருந்து எந்த ஒரு கட்சியும் டார்ச் சின்னத்தை கேட்காததால் அங்கு கமல்ஹாசனின் ம.நீ.ம. கட்சிக்கு டார்ச் சின்னம் கிடைத்துவிட்டது. டார்ச் சின்னத்தை முதல் விருப்பமாக தெரிவித்திருந்த கமல், இரண்டாவது, மூன்றாவது விருப்பமாக 2 சின்னங்களை அவர் குறிப்பிடவில்லை. அதனால், தமிழகத்தில் கமல் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் சமயத்தில் அப்போது ஒதுக்கப்படும் சியேட்சை சின்னம்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள். அதனால் தமிழகத்தில் டார்ச் சின்னம் கமலுக்கு கிடைப்பது கேள்விக்குறிதான்.