Skip to main content

விகடன் இணையதளம் முடக்கம் : “பா.ஜ.க.வின் பாசிசத் தன்மைக்கு எடுத்துக்காட்டு” - முதல்வர் கண்டனம்!

Published on 16/02/2025 | Edited on 16/02/2025

 

Vikatan website shutdown This is an example of the BJP fascist nature CM condemns

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. அதன்படி, 104 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. அப்போது இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்ட போது பயணம் முழுவதும் கால்களில் சங்கிலி மாட்டியும், கைகளில் விலங்குகள் இட்டும் பயணித்தனர். இது தொடர்பான படங்களும் வெளியாகியிருந்தன. இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனக் கண்டனம் எழுந்திருந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை விமர்சித்து விகடன் சார்பில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதற்காக விகடன் இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விகடன் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. முன்னதாக விகடன் இணைய இதழான, ‘விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10, திங்கள்) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்துப் பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.

இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, தமிழ்நாடு பாஜக மாநில தலைவரால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. நூற்றாண்டு காலமாக விகடன் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்துச் சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan website shutdown This is an example of the BJP fascist nature CM condemns

இந்நிலையில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதழியலில் நூறாண்டுக் காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல. பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திரத்திற்கான போராட்டத்தில் எப்போதும் முன் நிற்கும் நக்கீரன், விகடன் மீதான இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் துணை நிற்கிறது. 

சார்ந்த செய்திகள்