சமீப காலமாக கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்றார் போல் கஞ்சா விற்பனையும் பஞ்சமில்லாமல் ஜோராக நடந்து வருகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் விதமாக காவல் துறையும் கடுமையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் களியக்காவிளை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரம் - நாகர்கோவில் வந்த கேரளா அரசு பேருந்தில் இருந்து களியக்காவிளையில் இறங்கிய ஒரு தம்பதியினர் கையில் பேக்குடன் பஸ் நிலையத்தின் பின் பக்கம் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த தம்பதியினரிடம் ஏதோ கூறிவிட்டு மேக்கோடு சாலையை நோக்கி சென்றனர். உடனே அந்த தம்பதியினரும் அந்த சாலையை நோக்கி நடந்தனர். இது அங்கு நின்று கொண்டிருந்த தனிப்படை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே போலீசாரும் அவர்களை பின் தொடா்ந்தனர்.
மேக்கோடு இறக்கத்தில் தனியாக நின்று கொண்டிருந்த தம்பதியினரிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் மலையாளத்தில் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த மது - ஸ்ரீபிரியா தம்பதியினர் என்றும் உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார்கள். இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர்கள் கையில் இருந்த பேக்கை சோதனை செய்ததில் அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவர்கள் விசாகபட்டிணத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள சிறிய வியாபாரிகளுக்கு விற்று வருவதும், இந்த தொழிலில் கடந்த 4 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதும் தெரியவந்து. மேலும் கணவன் மனைவியாக சென்று விற்பனை செய்து வந்ததால் போலீசார் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என கூறினார்கள். உடனே போலீசார் அவர்களை மார்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு வந்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.