இந்திய தடகள சங்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் 17- வது இளையோர் கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தேசிய அளவிலான போட்டியை நடத்த தமிழ்நாடு மாநில தடகள சங்கத்திடம் ஒப்படைத்தது. இந்திய தடகள சங்கம். தமிழ்நாடு மாநில தடகள சங்கம் தேசிய அளவிலான போட்டியை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து செப்டம்பர் 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 26ந்தேதி வரையென 3 நாட்கள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதிலும் இருந்து வந்துயிருந்த 1000 விளையாட்டு வீரர்கள் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்ற 42 பிரிவு விளையாட்டுகளில் ஈடுப்பட்டனர்.
அந்த நிகழ்வின் இறுதி நாளான செப்டம்பர் 26ந்தேதி, சிறப்பு விருந்தினர்களாக தமிழக தடகள சங்க தலைவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வால்டர்தேவாரம், திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனம், திருவண்ணாமலை மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கலந்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுயிருந்தது. அதேபோல், இதில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு முதல் முறையாக விருதுகளோடு சேர்த்து பண பரிசும் வழங்குவதாக மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
செப்டம்பர் 26ந்தேதி மாலை 6 மணியளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பை ஹரியானா மாநில அணிக்கும், பெண்கள் பிரிவில் தமிழக அணிக்கும், ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை தமிழக அணி பெற்றது. அவர்களுக்கான கோப்பையை ஐ.பி.எஸ் அதிகாரி மயில்வாகனம் வழங்கினார்.
இதில் கலந்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுயிருந்த வால்டர் தேவாரம், சிபி சக்கரவர்த்தி போன்றவர்கள் கலந்துக்கொள்ளவில்லை. தேவாரத்துக்கு உடல்நிலை சரியில்லாதததால் கலந்துக்கொள்ளவில்லையாம். அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி சிபிசக்கரவர்த்தி, டி.ஐ.ஜி கூட்டத்தில் கலந்துக்கொள்ள சென்றுவிட்டார். அதனால் கலந்துக்கொள்ளவில்லை என்றனர் போலீசார். இவர்கள் தான் கலந்துக்கொள்ளவில்லை என்றால் மாவட்ட தடகள சங்க தலைவரான மருத்துவர் எ.வ.கம்பனும் கலந்துக்கொள்ளவில்லை. இதுப்பற்றி அந்த தரப்பில் விசாரித்தபோது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில் கலந்துக்கொள்ள சென்றுவிட்டார் என்றார்கள்.
இங்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் முறையாக பண பரிசு வழங்கப்படும் என அறிவித்துயிருந்தது மாவட்ட தடகள சங்கம். கோப்பைகள் மட்டும் வழங்கினார்களே தவிர பண பரிசு வழங்கவில்லை என்பது விளையாட்டு வீரர்களையும், ஆர்வலர்களையும் வேதனைப்பட வைத்தது.