தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை உருவாகி நோய்த் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தொற்று பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடலூர் மாவட்டத்தில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை மூலம் மாவட்டத்திலுள்ள 13 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தனிமைப்படுத்தும் மையமாக தயார் செய்யப்பட்டுள்ளன. அதன்படி விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் கரோனா தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு, அதில் 200க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (25.05.2021) தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். தொடர்ந்து அமைச்சர் கணேசன் முகக் கவசங்கள், சானிடைசர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நோயாளிகள், தங்கியுள்ள பகுதிகளில் சுகாதாரம், கழிவறையை சுத்தம் செய்தல், தூய்மைப் பணி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனவும், நகராட்சிப் பணியாளர்களிடம் தேவை குறித்து கேட்டால் நோயாளிகளை உதாசீனப்படுத்தி வெறுப்புணர்வுடன் நடந்துகொள்வதாகவும் அங்குள்ளவர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு 'இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என உறுதியளித்த அமைச்சர் கணேசன், தொடர்ந்து அங்கிருந்த நகராட்சி ஆணையர் அசோக் குமாரிடம், "விருத்தாசலம் நகராட்சியில் கரோனா பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்றுவருகிறது. பணிகள் எதுவும் திருப்திகரமாக இல்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என எச்சரித்தார்.
பின்பு அங்குள்ள அதிகாரிகளிடம், "நோயாளிகளிடம் எந்தவித கடுமையான சொற்களையும் பயன்படுத்தக்கூடாது" எனக் கூறினார். அதற்கு நகராட்சி ஆணையர், "நாங்கள் சரியாகத்தான் பணியை செய்கிறோம்" என கூற, அதனை மறுத்த அமைச்சர் கணேசன், "நானும் இதே ஊரில்தான் வசிக்கிறேன். எனது வீடும் நகராட்சி அலுவலகம் அருகில்தான் உள்ளது. அதனால் உங்கள் நடவடிக்கைகளை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்" என கடுமையாக கண்டித்தார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ஆலடி ரோட்டில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார்.
இதேபோல் பெண்ணாடத்தில் கரோனா பரிசோதனை முகாமை ஆய்வுசெய்து, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா என மருத்துவக் குழுவிடம் கேட்டறிந்தார். இதேபோல் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, “மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை; குடிநீர் தட்டுப்பாடு; கழிவறை பயன்படுத்தும் நிலையில் இல்லை” என நோயாளிகள் குறைகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சி.வெ. கணேசன் நேற்று (26.05.2021) தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, ஜெயின் ஜுவல்லரி சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 1.50 லட்சம் செலவில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை தலைமை மருத்துவ அலுவலர் எழிலிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அமைச்சர் கணேசன், "கரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தொடர்ந்து கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை ஆய்வுசெய்து வருகிறோம். இன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், போக்குவரத்து தொழிலாளர்கள், செராமிக் தொழிற்சாலைகளில் பணியாற்றக் கூடிய 400 தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், ஏற்கனவே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 15 படுக்கைகள், செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், கூடுதலாக மேலும் 10 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கு தேவையான ஆக்சிஜன் தயார் நிலையில் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் தேவைப்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய ஒரு சூழலையும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமங்களில் இருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளை இன்முகத்தோடு வரவேற்று அவர்களுக்குத் தேவையான மருத்துவ முறைகளை, சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்று மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என கூறினார்.
தடுப்பூசி முகாமில் நேற்று காலை திருமணம் செய்துகொண்ட புதுப்பெண், புது மாப்பிள்ளை கழுத்தில் மாலையுடன் வந்து அமைச்சர் கணேசன் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆய்வுப் பணிகளில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை கடலூர் மாவட்ட துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் ஜெகபதி, விருத்தாசலம் வட்டாச்சியர் சிவக்குமார், திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.