வனப்பகுதிகளில் வாழுகிற சிங்கம் புலி, சிறுத்தைகள் உள்ளிட்ட, கொடிய மிருகங்கள் தொடங்கி மான், மிளா, கரடி, சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி ஆகிய சாதாரண மிருகங்கள் பற்றி வருடம் தோறும் வனத்துறை கணக்கெடுப்பது நடைமுறையில் உள்ளது. தற்போது அரிதிலும் அரிதான பிணந்தின்னி கழுகுகளின் கணக்கெடுப்பு தொடங்கவேண்டும் என அறிவிக்கப்பட்டு முதன் முதலாக வரும் பிப்ரவரி முதல் தொடங்க விருக்கிறது.

காகம், பருந்து போன்ற சாதாரண பறவைகளின் உணவுப் பழக்க வழக்கங்களும், பிணந்தின்னி கழுகுகளின் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறுபட்டவை. முன்னவைகள், பிணங்கள் பக்கம் அண்டுவதில்லை. பிணந்தின்னிக் கழுகுகளோ பிணத்தின் துண்டுகளை மட்டுமே உண்டு வாழ்வதால் அவை பிணந்தின்னி என்ற அழைக்கப்பட்டன. ஆனால் இவைகளின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. தமிழகத்தில் நீலகிரி, முதுமலை, சத்தியமங்கல், போன்ற வனப்பகுதிகளிலும், மோயாறு, குமரி மாவட்டத்தின் அண்டைப் பகுதியான கேரளாவின் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளிலும், பல வகையான கழுகுகள் வாழ்கின்றன. ஆனால் பிணந்தின்னி கழுகுகளில் மஞ்கள் திருடி பாறு, வெண்முதுகு பாறு, நீண்ட அலகு பாறு, செந்தலை பாறு, என நான்கு வகை கழுகுகள் உள்ளன. இவைகள் பெரும்பாலும், கால் நடைகளின் மாமிசத்தையே இழுத்துக் கொத்தி உண்டு வாழ்கின்றன. அதற்கேற்றாற் போல் அதன் அலகுகள் கூர்மையாகவும் நீண்டும் உள்ளன. காண்பதற்கு கர்ண கொடூரமாக இருக்கும் இவைகள் ஒரே கொத்தில் சதையை அள்ளிவிடும் என்கிறார்கள் கால் நடை மருத்துவர்கள்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கண்க்கெடுப்பின்படி தேசம் முழுவதிலும் 8 கோடி கழுகுகள் இருந்ததாக கண்டறியப்பட்டது. ஆனாலும் பிணந்தின்னி கழுகுகள் போதிய உணவு கிடைக்காமல் அழிவின் பிடியில் உள்ள நிலையில் தமிழகத்தின் மோயாறு பகுதிகளில் நல்லமுறையில் தனது இனப் பெருக்கத்தை விரிவு செய்து. வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தவிர வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் காலங்களில் பிணந்தின்னி கழுகுகள் தொடர்பாக முறையாக கணக்கெடுக்கப்படுவதில்லை. எனவே இவ்வகை இன கழுகுகளின் கணக்கெடுப்பு தனியே நடத்தப்பட வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தான் தென்னிந்தியாவில் பிணந்தின்னி கழுகுகளின் கணக்கெடுப்பு பணி, வரும் பிப்ரவரி முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கர்னாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மேற் கொள்ளப்படவிருக்கிறது. மேலும், இப்பணியை வல்ச்சர் கன்சர்வேசன் ஒர்க்கிங் குரூப், எனப்படும் பறவைகள் கண்காணிப்பு குழு சார்பில் நடத்தப்படுகிறது.

தவிர கழுகு இனங்கள் நாளொன்றுக்கு நூறு கி.மீ. தூரம் வரை பறக்கும் வல்லமை கொண்டவை. எனவே மாநில அளவில் கணக்கெடுப்பு நடத்தினால் பலன் கிடைப்பதில்லை என்பதால் தென்னிந்திய அளவில் ஒருங்கிணைத்து இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆகிய மலைக்காடுகளிலும் கேரளாவில் அடர்த்தியான வயநாடு வன உயிரின மையத்திலும் அதோடு இணைந்த முதுமலை பந்திப்பூர் நாகர்கேரளா, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதியிலும் கணக்கெடுப்பு நடந்தப்பட உள்ளது என்கிறார்கள்.
அரிய வகையான பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை இருபது ஆண்டுகட்குப் பிறகு வெளிவர வாய்ப்புகள் வெளிப்படுகின்றன.