மத்திய பா.ஜ.க. அரசு சென்ற தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உதவி தொகை திட்டம் செயல்பட தொடங்கி விட்டது என்கிறார்கள் அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக முப்பதாயிரம் பேருக்கு தலா இரண்டாயிரம் வங்கி வழியாக கொடுக்கப்பட்டதாக மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது பிரதமர் மோடி அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்று மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆறாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து தொடர்ந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.
இது பற்றி ஈரோடு வருவாய் அலுவலர் கவிதா கூறியதாவது:- "மத்திய அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுதோறும் ஆறாயிரம் வழங்கப்படுவதாக அறிவித்து, திட்டத்தை செயல்படுத்தியது. இதனை இரண்டாயிரம் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து வருகிறது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மட்டும் இணையலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆகவே இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு லட்சம் விவசாயிகளில் தற்போது வரை 80ஆயிரம் பேர் ஏற்கனவே விண்ணப்பித்து, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஊர்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளை இத்திட்டத்தில் இணைத்து வருகிறோம்.
வேளாண் அதிகாரிகள், விஏஓ., அலுவலகத்திலும் விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். மாவட்டத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த 80ஆயிரம் பேரில் 30ஆயிரம் பேருக்கு முதல் தவணையாக தலா ரூ.2ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் தற்போது வந்து சேர்ந்துள்ளது. மேலும், சிலருக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களில் இருந்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு, தகுதி பட்டியலில் இணைந்துள்ளோம். இவர்களுக்கும் விரைவில் உதவித்தொகை கிடைக்கும். இந்த மாதம் கூட 15ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களது விபரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.
சென்னையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், மத்திய அரசுக்கு அனுப்பப்படும். பின்னர் மத்திய அரசு அவர்களுக்கான உதவித்தொகையை வங்கி கணக்கில் விரைவில் விடுவிக்கும்." என்றார்.