டம்மி முதல்வராக கனவை நினைவாக்கி கொண்டார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பயங்கரவாதம் எந்த விதத்திலும் தமிழகத்தில் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும். அதுவரை யாரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது.
தமிழக அரசு என்ன பேச வேண்டும் என்பது குறித்து யாரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதற்கான கட்டாயம் இல்லை. எங்களுக்கென ஒரு தனித்தன்மை இருக்கிறது. மாற்றான் பேச்சைக் கேட்டு எடுபிடியாக அதிமுக இருக்காது. திமுக வேண்டுமானால் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு தலையாட்டியிருக்கலாம்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை என்றைக்காவது கூட்டலாம். ஆனால், அவர் தினமும் கூட்டுகிறார். அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார். அதனால் தான், புதன்கிழமை டம்மி சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். முதல்வர் கனவு, கோட்டை போன்ற மாயைகளிலேயே ஸ்டாலின் இருக்கிறார். நிஜத்தில் சாதிக்க முடியாததை கற்பனையிலாவது செய்து ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது என அவர் கூறினார்.