
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கு நியமனம் செய்யப்படும்போது, தேர்வுக் குழுவில் ஊராட்சி ஒன்றியப் பெருந் தலைவர்களைச் சேர்க்காமல், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், தேர்வுக் குழுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பெருந் தலைவர்களைச் சேர்க்கவேண்டும் என்று கோரியும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியச் சேர்மேன் இளங்கோ சார்பில், வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரரின் சார்பில், வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆஜரானார். ‘தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டப்பிரிவு 96 படி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பணி நியமனம் செய்யப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் நியமனக் குழுவில் சேர்க்கப்படுகிறார்கள். அது போன்ற உரிமையை, சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கு நியமனம் செய்யத் தேர்வு செய்யும்போதும் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கில், மூன்று வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க, நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.