



குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தமிழகம் மட்டுமல்லாது நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் ஒபுலா படித்துறை பகுதியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சென்னையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோலம் போட்டு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வேண்டாம் என எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கடந்த இருதினத்திற்கு முன்பு சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு Against CAA, Against NRC என எழுதி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெசன்ட் நகரில் பொது இடம், வீட்டு வாசலில் கோலம் போடும் போராட்டம் நடத்திய 6 பெண்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பிறகு கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் தீவிரமடைந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் வீடுகளில் CAA வேண்டாம் என கோலமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து கோலம் போட்டு போராட்டதை துவக்கிவைத்தார்.