![Robbery in a car parked outside the restaurant!](http://image.nakkheeran.in/cdn/farfuture/p-KA-VG7YVOwENAPW75QESsuZtzD5kfHJL2xb71xeew/1637043431/sites/default/files/inline-images/th_1410.jpg)
திருச்சியில் செயல்பட்டுவரும் தனியார் உரம், பூச்சி மருந்து விநியோக நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகளாக ஆனந்தகுமார் (30), தனபால் (29) ஆகியோர் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் இருவரும் வழக்கமாக மாவட்டம் முழுவதும் உள்ள உரக்கடைகளுக்கு நேரில் சென்று விற்பனை செய்யப்பட்ட மருந்துகளுக்கான பணத்தை வசூலிப்பது வழக்கம்.
அதேபோல் நேற்று (15.11.2021), மணப்பாறை பகுதியில் உள்ள உரக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தை வசூலித்துவிட்டு, துவரங்குறிச்சியில் காரை நிறுத்தி, ஓட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது பலத்த மழை பெய்ததால் உணவருந்திவிட்டு மழைக்காக சிறிது நேரம் ஓட்டலுக்குள்ளேயே காத்திருந்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் காருக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த 1.41 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காசோலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப் பதிவுசெய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.