பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்ததாலும், மிரட்டி பணம் பறித்ததாலும் 22 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ராகேஷ் சர்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு நிச்சயம் செய்யப்பட்டது. அதன் பிறகு, ராகேஷ் சர்மாவும் அவரது குடும்பத்தினரும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு நேற்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், பக்கத்து வீட்டுக்காரர் ராகேஷ் ஷர்மா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னுடைய ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி ரூ.2 லட்சம் பணம் பறித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் அடிப்படையில், ராகேஷ் ஷர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.