!["Seeman's strategy is to lose the deposit" - tvk criticism](http://image.nakkheeran.in/cdn/farfuture/czadkOO5_rU1y5xwO2VOH4cpm5VIUwjxqdL2HAeiYVE/1739358057/sites/default/files/inline-images/a2515.jpg)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது. இதனிடையே அடுத்தாண்டு தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் மாற்றமில்லை என்று அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
த.வெ.க தலைவர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடந்த 10.02.2025 ஆம் தேதி திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தெடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ''அரசியல் வியூக வகுப்பாளர் என குறிப்பிட்ட காலமாக இந்த நோய் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். இதைப்பற்றி பேசி காலத்தை நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பணக்கொழுப்பு என விமசிர்த்த சீமானுக்கு பதிலடி கொடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப்பரப்பு இணை செயலாளர் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என எத்தனை காலம் கூறிக்கொண்டிருப்பார் சீமான். தவெகவின் அரசியல் சட்டமன்றத்தில் பேசுவதற்கு சீமானின் அரசியல் பட்டிமன்றத்தில் பேசுவதற்கு. நடைமுறை அரசியல் யதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை. சமகால அரசியல் சூழலில் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவை. ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதே வியூகமாக கொண்டவர் சீமான். திரள்நிதி பெறும் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனை பெறுவது தவறாக தெரிவதில் ஆச்சரியம் இல்லை. சீமானோடு தாங்களுக்கு என்றும் ஒத்துப்போகாது. தமிழ்த் தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என சீமான் சிந்திக்கிறார்' என தெரிவித்துள்ளார்.