திருவண்ணாமலை மாவட்டம், நகரம் சுண்ணாம்புக்காரத்தெருவை சேர்ந்தவர் பிரபல பாத்திர வியாபாரி 62 வயதான பாலசுப்பிரமணியன். இவருக்கு திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கரோனா ஊரடங்கு பிறகு தற்போது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பாத்திர கடையும் திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார் பாலசுப்பிரமணியன்.
சில தினங்களுக்கு முன்பு மனைவிக்கு காய்ச்சல் வந்துள்ளது. தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டவரை, அருகில் உள்ள தண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அங்கு அவருக்கு கரோனா தொற்று என்பது உறுதியாகியுள்ளது. இந்த ரிசல்ட் வருவதற்குள் நாங்கள் தனியாரில் சிகிச்சை எடுக்கிறோம் என அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளனர். அங்கு கரோனா பாதிப்பு இருந்ததை மறைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை 11ந்தேதி நள்ளிரவு அவர் இறந்துள்ளார், அவரது உடலை வாங்கிய குடும்பத்தார் வீட்டுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான உறவினர்கள், நண்பர்கள், சக வியாபாரிகள் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். அக்கம் பக்கத்தினர், அவர் கரோனாவால் இறந்துவிட்டார் என தகவல் சொல்லியுள்ளனர். அதிர்ச்சியான நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, கரோனா நோயாளியை எரிப்பதற்கான வேலைகளை செய்துள்ளனர்.
இந்நிலையில் பாலசுப்பிரமணி குடும்பத்தார் சோகத்தில் வீட்டில் இருந்துள்ளனர். மனைவி மறைந்த துக்கம் மற்றும் அவருக்கான இறுதி சடங்கினை கூட சரியாக செய்ய முடியவில்லையே என அழுது கொண்டு இருந்துள்ளார். அவரை குடும்பத்தார் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாமல் விரக்தியில் அழுதபடி இருந்துள்ளார். ஜூலை 12ந்தேதி மாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சு வலியால் துடித்த பாலசுப்பிரமணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலையும் நகராட்சி மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் கைப்பற்றி அவருக்கு கரோனா உள்ளதா என பரிசோதனை செய்துள்ளனர்.
கரோனாவால் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் அழ, அவர் நெஞ்சு வலியால் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேநேரத்தில் கரோனாவால் இறந்ததை மறைத்து அஞ்சலி செலுத்த வீட்டுக்கு கொண்டு வந்ததும், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பெண்மணி விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததும் பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.