![Workers are not ready to work says S.S. Subramaniam](http://image.nakkheeran.in/cdn/farfuture/Sfi90lNx4b0I8kCGheIWFmO-1IwFOYcrkJXb-4a31no/1739358434/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_257.jpg)
அண்மையில் இளைஞர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். சென்னையில் பிறந்த எஸ்.என்.சுப்பிரமணியன் எல் அண்ட் டி நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பொறியாளராக சேர்ந்துள்ளார். பின்பு அவரது திறமையால், தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார்.
இந்த சூழலில் தனது நிறுவன ஊழியர்களுடன் உரையாடிய எஸ்.என்.சுப்பிரமணியன், ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாததற்கு வருத்தம் அடைகிறேன்; ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை பார்க்க வைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் வீட்டில் மனைவியின் முகத்தை உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக உழைப்பாளர்களின் மனைவி குறித்து எஸ்.என்.சுப்பிரமணியன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்று திட்டம் நடைமுறையில் இருக்கும் போது, இந்தியர்கள் வாரத்திற்கு 7 நாட்களும் உழைக்க வேண்டும் என்று எஸ்.என்.சுப்பிரமணியன் கூறுவது முதலாளித்துவத்தின் அதிகார போக்கைக் காட்டுவதாக பலரும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய எஸ்.என்.சுப்ரமணியன், “அரசு நலத் திட்டங்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்யத் தயாராக இல்லை. அண்மைக் காலமாக கட்டுமானத் தொழிலாளர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் வருத்தமளிக்கிறது; தொழிலாளர்கள் பலருக்கும் நேரடியாக கிடைக்கும் நடத்திட்டங்களால் அவர்கள் இருக்கும் இடத்திலேயே பொருளாதார தன்னிறைவைத் தந்துவிடுகிறது. இதனால் அவர்கள் புலம்பெயர விரும்புவதில்லை” என்று பேசியுள்ளார்.