நாமக்கல் மண்டலத்தில், கரோனா மற்றும் பறவை காய்ச்சல் பீதியால் வரலாறு காணாத வகையில் சரிந்து வந்த முட்டை விலை, கடந்த மூன்று நாள்களில் படிப்படியாக 125 காசுகள் வரை உயர்ந்துள்ளது.
மார்ச் 23ம் தேதியன்று முட்டை விலை 25 காசுகள் உயர்ந்தன. அதற்கு அடுத்த நாள் (மார்ச் 24) முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 50 காசுகள் உயர்ந்தன. அதையடுத்து மூன்றாவது நாளாக 25ம் தேதியன்றும் முட்டை விலையை என்இசிசி நிர்வாகம் மேலும் 50 காசுகள் உயர்த்தியது. இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 275 காசுகளில் இருந்து அதிரடியாக 325 காசுகளாக அதிகரித்துள்ளது.
கோழிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ்அப் மூலமாக விஷமிகள் வதந்தி பரப்பியதால் பிப்ரவரி இறுதி வாரத்தில் இருந்து மார்ச் மூன்றாவது வாரம் வரை நாமக்கல் மண்டலத்தில் முட்டைக் கோழிப்பண்ணைகள் அடியோடு முடங்கின. பண்ணைக் கொள்முதல் விலை 1 ரூபாய் வரை இறங்கி வந்தது. பண்ணை உரிமையாளர்களே சாலையோரங்களில் கடை விரித்து முட்டையை கூவிக்கூவி விற்கும் நிலை ஏற்பட்டது. என்இசிசி நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் குறைத்து விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் முட்டைக்கு 2.70 முதல் 3 ரூபாய் வரை நேரடியாக நட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில், முட்டை விலை மீண்டும் படிப்படியாக ஏறுமுகம் காண்பது பண்ணையாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், ''தற்போது கேரள மாநிலத்தில் முட்டை விற்பனை சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காய்கறி தட்டுப்பாடு காரணமாக முட்டையை மக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் முட்டை விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி தினமும் ஒரு கோடி அளவுக்கு குறைந்துவிட்டது. உற்பத்தி மற்றும் விலை குறைவு போன்ற காரணங்களால் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனங்களைத் தமிழகத்துக்குள் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.