தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பெண்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு மூடியது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குன்னக்குரும்பி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவுப்படி 5 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் அந்தக்கடையை இன்று வெள்ளிக்கிழமை டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் திறந்த நிலையில், அப்பகுதி பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் டாஸ்மாக் கடைக்கு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் வழியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடு என்று முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த சில குடிமகன்கள் எங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று கூறினர். பெண்கள், மாணவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுள்ள தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டத்திலிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சனிக்கிழமை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்புக் கொடுத்து போராட்டத்தை முடிக்க வைத்தனர். பெண்களின் முற்றுகைப் போராட்டத்தால் கடை திறந்து சில மணி நேரத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.