அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் தொடங்கி சுமார் 5 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை காலை 10.15 மணிக்கு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு பின்னரான வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அமைச்சர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி வெண்டிலேட்டர் உதவியுடன் 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்திற்கு இதயத்திற்கு ஓய்வு தேவை என்பதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்கத் தொடங்குவார். அறுவை சிகிச்சைக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. மேலும் வலி நிவாரணி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, இதயத் துடிப்பின் அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.