தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்றுமுதல் (12.10.2021) அறிவிக்கப்பட்டுவருகின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போதுவரை நடைபெற்றுவருகிறது. கோவையில் பெரியநாயக்கம்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த குருடம்பாளையம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
அத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் என்ற வேட்பாளருக்கு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது. வேட்பாளர் கார்த்திக் வீட்டில் குடும்ப உறுப்பினர்களே 6 பேர் உள்ள நிலையில், ஒரு வாக்கை மட்டும் பெற்றது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் வெள்ளப்பனேரி பஞ்சாயத்து 7வது வார்டு உறுப்பினர் பதிவிக்கான தேர்தலில் மூன்று பெண்கள் போட்டியிட்டனர். நேற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது வேட்பாளர்கள் கலா, மக்டோனா ஆகிய இருவரும் தலா 99 ஓட்டுகள் பெற்று சமநிலை வகித்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இருவரில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதன்படி இரண்டு பேரின் பெயர்களும் சீட்டில் எழுதி, குலுக்கல் நடைபெற்றது. அதன் பின்னர் அதில் கலா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்தில், கிணறு சின்னத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியே வந்ததும், தரையில் உருண்டு புரண்டு அழுதார். அப்போது ‘என்னை கிணற்றில் தள்ளிவிட்டார்களே படுபாவிகள்’ என்று கூறி கண்ணீர்விட்டார்.