பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15- ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா- அச்சங்குளத்தில், சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் ஃபயர் ஒர்க்ஸில், ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரித்தபோது, வெடிமருந்து உராய்வின் காரணமாக, பிற்பகல் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
பலத்த காயமடைந்த 33 பேர் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு 80% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக முதல்வரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.