தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளைத் தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக, தனது இறுதி வாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம்,பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின் 39- வது நாளான நேற்று (08.01.2020), தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சார்பில், அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
அப்போது அரசு சார்பில், தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதைத் தவிர வேறு வழியே இல்லையெனவும், மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்னும் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆலையைச் சுற்றி 25 மீட்டருக்கு பசுமைப் போர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விதியைக்கூட ஆலை நிர்வாகம் பின்பற்ற தவறி விட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் விதிகளைத் தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும் உச்சநீதிமன்றம் கடந்த காலத்தில் விதிகளைப் பின்பற்றாததற்காக ஆலை நிர்வாகத்திற்கு விதித்த ரூ.100 கோடி அபராதமே அதற்கு சான்று எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், கடந்த 2018- ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக வேதாந்தா நிர்வாகம் கூறும் அதே வேளையில், ஆலை ஆரம்பித்த கடந்த 1997-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர்கள் கூறும் கணக்கை அடிப்படையாக வைத்து பார்த்தாலே ரூ.20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது தெரிய வருவதாகவும், ரூ.3000 கோடி முதலீடு செய்து ரூ.20,000 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய பின்னரும் ஆலையை மூடியதால் பலத்த நஷ்டம் என்று கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எடுத்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுப்பாடு விதித்தாலும் அதனைப் பின்பற்ற தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசுத் தரப்பு, ஆலை நிர்வாகத் தரப்பு, இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.